Sagayam IAS News - நேர்மையாளராக இருக்க தான் எடுத்த நிலைபாட்டினால் சந்தித்த அவமானங்களை உரையின் போது விளக்கினார் சகாயம்.
Sagayam IAS News - சென்னையில், ‘மக்கள் பாதை' அமைப்பு சார்பில் நேர்மையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சகாயம் ஐ.ஏ.எஸ் (Sagayam IAS) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நல்லக்கண்ணு உட்பட பலருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சகாயம், “மக்கள் சேவைக்கு எது தடையாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிடுவேன். அது பதவியாக இருந்தாலும் சரி…” என்று அதிரடியாக பேசியுள்ளார்.
நேர்மையாளராக இருக்க தான் எடுத்த நிலைபாட்டினால் சந்தித்த அவமானங்களை உரையின் போது விளக்கிய சகாயம், “ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, ஊழல் செய்யக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவன் நான். அப்படி எடுத்த நிலைப்பாட்டினால் பல்வேறு அவமானங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறேன். எனக்கே பல துன்பங்கள் வந்திருக்க இன்று பலர், சாதாரண அரசுப் பதவிகளில் இருந்து கொண்டு நேர்மையாக மக்கள் சேவையாற்றி வந்துள்ளார்கள். ஐ.ஏ.எஸ் என்பதால் எனக்கு ஊடக வெளிச்சம் சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், அவர்களுக்கு அப்படி இல்லை. என்னைவிட மேன்மையானவர்கள் அவர்கள்…,” என்று விருது வாங்கியவர்களுக்குப் புகழாரம் சூட்டினார் சகாயம்.
தொடர்ந்து அவர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி சூசகமாக தெரிவித்தார், “தமிழக அளவில் உள்ள நேர்மையாளர்களின் பட்டியலை எடுத்து வருகிறோம். அவர்கள் பற்றி மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிப்போம். ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது, சுரண்டலை ஆதரிப்பது, மானுடப் பன்புக்கு எதிரானது. ஊழலால் சிக்கித் தவிக்கும் தொன்மை பொருந்திய தமிழ்ச் சமூகம் சீக்கிரம் அதிலிருந்து மீண்டெழும். தமிழ்ச் சமூகத்தை மீட்கப் போவது நாம்தான். மக்களுக்காக சேவையாற்ற எது தடையாக இருந்தாலும் அதைத் தூக்கியெறிவேன். பதவி தடையாக இருந்தால் அதையும் தூக்கியெறிவேன்” என்று பேச, மக்கள் ஆர்ப்பரித்தனர்.
சகாயம், கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் தொடர்ந்த சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரின் இந்தப் பேச்சு பல விஷயங்களை சூசகமாக சொல்லி இருக்கிறது.