This Article is From Jan 29, 2020

பாஜகவில் இணைந்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவரான சாய்னா நேவால் (29) ஹரியானாவில் பிறந்தவர் ஆவார்.

பாஜகவில் இணைந்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

சாய்னா நேவால் தனது அடுத்தடுத்த ட்வீட்டர் பதிவுகளால் பாஜகவில் இணைவார் என பரவலாக பேசப்பட்டது.

New Delhi:

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் வரும் பிப்.8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாய்னா பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக பாஜக சால்வை அணிந்த படி செய்தியாளர்களை சந்தித்த சாய்னா நேவால் கூறியதாவது, நான் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளேன். நான் மிக கடின உழைப்பாளி. அதனால், கடினமான உழைப்பவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.

பிரதமர் மோடி நாட்டிற்காக பல விஷயங்களை செய்வதை என்னால் காண முடிகிறது. அதனால், அவருடன் நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று அவர் கூறினார். மேலும், நரேந்திர மோடியிடம் இருந்து அதிகளவிலான உத்வேகத்தை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவரான சாய்னா நேவால் (29) ஹரியானாவில் பிறந்தவர் ஆவார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தீவிர பிரச்சாரங்கள் நடந்து வரும் நிலையில், பாஜகவுக்கு பெரிய பலமாக அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது உள்ளிட்டவைகளை பெற்றவர் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். முன்னாள் உலக நம்பர் 1 இடத்தையும் இவர் பெற்றுள்ளார். 

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா இதுவரை 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும், 2009ம் ஆண்டில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த சாய்னா, 2015ல் முதலிடத்தையும் பெற்றார். 

சமீப காலமாக பிரதமர் மோடியை புகழ்ந்து சாய்னா அடுத்தடுத்து பதிவிட்ட ட்வீட்டுகளால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று பரவலாக பேசப்பட்டது. 

கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் உரையை பாராட்டிய அவரது ட்வீட் ஒன்று சர்ச்சைக்குரியதாக மாறியது. தொடர்ந்து, #bharatkilaxmi என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு பெண்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதேபோல், அடுத்தடுத்து ஒரே மாதிரியான ட்வீட்களை அவர் பதிவு செய்து வந்ததால், அவர் சமூகவலைதளங்களில் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். 

முன்னதாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் டெல்லியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மற்றும் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் உள்ளிட்ட பல பிரபலங்களை பாஜக தன்வசமாக இழுத்து வருகிறது. 

இதேபோல், ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்னதாக மல்யுத்த வீரர் சுஷில் குமார், முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோரை பாஜக தன்வசமாக்கியது. தொடர்ந்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்ற சந்தீப் சிங் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 
 

.