உச்ச நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் செய்துள்ள மேல்முறையீடு, வரும் 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. (கோப்புப் படம்)
ஹைலைட்ஸ்
- இன்று மண்டோலி சிறைக்கு அழைத்து வரப்பட்டார் சஜ்ஜன் குமார்
- 1984 சீக்கிய கலவர வழக்கில் தண்டனைப் பெற்றார் குமார்
- தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் குமார்
New Delhi: 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவர வழக்கில் தண்டனைப் பெற்ற முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான சஜ்ஜன் குமார், இன்று டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டெல்லியின் ராஜ் நகரில் வசித்து வந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. கலவரம் நடந்தபோது, அவர்தான் ராஜ் நகரைச் சேர்ந்த எம்.பி-யாக இருந்தார்.
டெல்லி நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்னர் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று, சஜ்ஜன் குமாரை வழக்கிலிருந்து விடுவித்திருந்தது. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரணையை முடித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக சஜ்ஜன் குமார் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
முன்னதாக, ‘எனக்கு 8 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வகையில் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே, சரணடைய எனக்கு ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் கோரினார். அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் செய்துள்ள மேல்முறையீடு, வரும் 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, அவரது சீக்கிய பாதுகாவலர்கள், 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இதையடுத்து சீக்கியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.