Thane: சல்மா தப்ஸம் என்ற 30 வயதுப் பெண் ஒருவர் நேற்று மும்பைக்கு அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் டிரெய்ன் ஏறியுள்ளார். அப்போது, அவருக்கு பிரசவ வலி வந்துள்ளது. இதனால், அவருக்கு ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
மும்பை எல்டிடி - விசாகபட்டிணம் எக்ஸ்பிரஸ் ரயில், கல்யாண் ரயில் நிலையத்துக்கு வந்தவுடன், சல்மா தப்ஸம் அதில் ஏறியுள்ளார். ரயிலுக்குள் வந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீஸ், ரயில்வே துறை மருத்துவக் குழு மற்றும் கல்யாண் ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் தப்ஸம் இருக்கும் ரயில் பெட்டிக்கு விரைந்தனர். மருத்துவக் குழு, தப்ஸமுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து தப்ஸமுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண் குழந்தையாகும். குழந்தைகள் பிறந்ததையடுத்து, ரயிலிலிருந்து சக பயணிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர். பிரசவம் முடிந்த பிறகு தாயும் இரு குழந்தைகளும் அருகிலிருந்த மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நிதின் கௌர், ‘தப்ஸம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்தவுடன், அவரை வந்து பார்த்தோம். உடனேயே அருகிலிருக்கும் ரயில்வே துறை மருத்துவக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட பிறருக்குத் தகவல் கூறினோம். தப்ஸம் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் நல்ல உடன் நலத்துடன் இருக்கின்றனர். தப்ஸமுக்கு உதவி செய்தது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது’ என்றார் சந்தோஷத்துடன்.