Rahul Gandhi தேர்தல் முடிந்த உடனேயே, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
New Delhi: தொடர்ச்சியாக இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் (Congress), தன் இருப்புக்காக தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கட்சியின் மிகப் பெரிய பிரச்னை என்ன என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான சல்மான் குர்ஷித் (Salman Khurshid) வெளிப்படையாக பேசியுள்ளார். கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி Rahul Gandhi), தனது பதவியைவிட்டு விலகியதுதான் பிரச்னையின் மூலக் காரணம் என்று சொல்லும் அவர், பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
“எதனால் வீழ்த்தப்பட்டோம் என்பது குறித்து நாங்கள் சரியாக விவாதிக்கவே இல்லை. எங்களின் மிகப் பெரிய பிரச்னை எங்கள் தலைவர், விலகிவிட்டதுதான்…” என்று வருத்தத்துடன் AP செய்தி நிறுவனத்திடம் பகிரும் குர்ஷித்,
“ராகுல் காந்தியின் விலகல் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. சோனியா காந்தி தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் அவர் இடைக்கால தலைவராக மட்டுமே செயலாற்றி வருகிறார்” என்றார். குர்ஷித், உத்தர பிரதேச காங்கிரஸின் மிகப் பெரும் ஆளுமையாக இருப்பவர். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தர பிரதேசத்தின் 2 தொகுதிகளை மட்டுமே வென்ற காங்கிரஸ், 2019 தேர்தலில் 1 இடத்தை மட்டுமே கைப்பற்றியது. ராகுல் காந்தி, தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் தோல்விகண்டார்.
ராகுல் காந்தி, 2019 தேர்தலுக்கு மிகவும் அதிரடியாக பிரசாரம் செய்தபோதும், அக்கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதே நேரத்தில் பாஜக 303 இடங்களைப் பிடித்தது.
தேர்தல் முடிந்த உடனேயே, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல். 2017 ஆம் ஆண்டுதான் அவர் தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகுதான் 19 ஆண்டுகளாக கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, கர்நாடகாவில் கூட்டணி அரசு ஆட்சியை இழந்த காங்கிரஸ், அடுத்ததாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தேர்தலை சந்திக்க உள்ளது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், பாஜக-வுக்குத் தாவியுள்ளனர்.