நேத்ரா தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவதுதான் தனது விருப்பம் என்று நேத்ரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைலைட்ஸ்
- பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் செலவு செய்தார்
- கல்விக்காக நேத்ரா ரூ. 5 லட்சத்தை சேமித்து வைத்திருந்தார்
- நேத்ராவின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு
மகள் நேத்ராவின் கல்விக்காக சேர்த்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் என்பவர் கொரோனா நிவாரணத்திற்காக செலவிட்டார். இதனை பிரதமர் மோடி பாராட்டியுள்ள நிலையில், அவரது மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நேத்ரா தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவதுதான் தனது விருப்பம் என்று நேத்ரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பாராட்டியதை தொடர்ந்து சலூன்கடைக்காரர் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். நேத்ராவை கவுரவிக்கும் வகையில் அவரை ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக ஐ.நா. அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த நிலையில் நேத்ராவின் கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் கூறியிருப்பதாவது-
மதுரை மாவட்டம், மேலமடை வண்டியூர் மெயின்ரோடு முடி திருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர் தனதுமகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.