கேமராவில் பதிவான காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Lucknow: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலை அமைத்தது தொடர்பாக எழுந்த தகராற்றில் சமாஜ்வாதி கட்சியின் பிரமுகர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கேமராவில் பதிவாகியிருக்கும் இந்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாம்சோய் என்ற கிராமம் உள்ளது. இங்கு பஞ்சாயத்து தலைவராக இருப்பவரின் கணவர் லால் திவாகர், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். அவரும், அவரது மகனும், கிராமத்தில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டுள்ளனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சாலையை பார்வையிட்ட லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோரிடம் உள்ளூர் பிரமுகர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் செய்தவர்களில் சவிந்தர் என்பவர் ஒருவர் ஆவார். இவர் உள்ளூர் தாதா என்று கூறப்படுகிறது. இந்த சவிந்தர் மற்றும் அவருடன் வந்தவர் ஆகியோர் கையில் துப்பாக்கியை வைத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லையை மீறிச் சென்று விட்டது. அப்போது, சவிந்தரும், அவருடன் வந்திருந்தவரும் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில், திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
பஞ்சாயத்து நிர்வாகம் அமைத்த சாலை தங்களது வயலை ஆக்கிரமிப்பதாக கூறி சவிந்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டபின்னர் குற்றவாளிகள் 2 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.