நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை, அவரது தரப்பு திரும்பப் பெற்றுள்ளது.
New Delhi: 14 நாட்கள் நீதிமன்றக் காவல் பெற்று திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரியும், நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரியும் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் சிதம்பரம்.
அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “அரசியல் பழிவாங்கலுக்காகவே என் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதை விசாரிக்கும் அமைப்புகள் மத்திய அரசின் அந்த நோக்கத்திற்காகவே செயல்பட்டு வருகின்றன” என்று குற்றம் சாட்டினார்.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றம், “எல்லோரையும் போல உங்களுக்கும் ஒரே வகையிலான உணவுதான் கொடுக்கப்படும்” என்று கறாராக கூறியுள்ளது.
சிதம்பரத்துக்கு வீட்டுச் சாப்பாடு கொடுக்கப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியபோது நீதிமன்றம் இப்படி உஷ்ணமாகி கருத்து தெரிவித்தது. நீதிமன்றத்தின் கருத்துக்கு சிபல், “அவருக்கு 74 வயதாகிறது” என்று எதிர்வினையாற்றினார்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “முன்னாள் முதல்வர் சவுத்தாலாவும் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு இதைவிட வயதாகிறது. இருப்பினும் அவருக்குத் தனியாக உணவு அளிக்கப்படுவதில்லை. சட்டம் அனைவரையும் சரிசமமாகத்தான் நடத்த வேண்டும்” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சிபிஐ அமைப்பு, ப.சிதம்பரத்தின் பிணை மனு மீது பதில் அளிக்கக் கோரி, வழக்கை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை, அவரது தரப்பு திரும்பப் பெற்றுள்ளது.