This Article is From Nov 24, 2018

“பாபர் மசூதியை 17 நிமிடத்தில் இடித்தோம்; சட்டம் இயற்ற எவ்வளவு நேரம் ஆகும்?” - சீண்டும் சிவசேனா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது ராமர் கோயில் தொடர்பாக சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருகிறது.

மாநிலங்களவை எம்பிக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு அளித்துள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்

New Delhi:

ராமர் கோயில் விவகாரத்தில் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று மத்திய பாஜக அரசை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள அக்கடசியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “பாபர் மசூதியை 17 நிமிடத்தில் இடித்தோம். சட்டத்தை கொண்டு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?. ராமர் கோயிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாது” என்றார்.

அயோத்தியா விவகாரம் தொடர்பாக நாளை மறுதினம் பேரணியை நடத்துவதற்கு விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதனால் மத்திய அரசுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா - பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வார இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார். இதேபோன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவிருக்கும் சூழலில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தி வருகிறது.

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது.

.