New Delhi: சாராதா சிட் ஃபண்டு தொடர்பான வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினி சிதம்பரம் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாராதா குழுமம் சார்பில் நளினி சிதம்பரம் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடியதற்காக, அவருக்கு 1 கோடி ரூபாய் தரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த அமலாக்கத் துறை, நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் தங்களது அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதற்குத் தடை கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நளினி சிதம்பரத்துக்கு எதிராக கடந்த ஜூலை 10 ஆம் தேதி தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து நளினி, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையின் சம்மனுக்கு எதிராக மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணையின் போது தான், நளினி சிதம்பரத்தின் மீது தற்போதைக்கு அமலாக்கத் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். சம்மன் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பி அமலாக்கத் துறைக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய நளினி சிதம்பரம், ‘ஒரு வழக்கறிஞர் அவர் துறை சார்ந்த சேவையை தனது வாடிக்கையாளருக்கு அளிப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டு, சம்மன் கொடுப்பது சரியன்று. இதைப் போன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று வாதாடினார்.