This Article is From Jul 08, 2019

உடல்நிலை பாதிப்பு: சிறை செல்வதில் இருந்து விலக்குக் கேட்கும் சரவண பவன் ராஜகோபால்!

கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் நேற்றே சரண் அடைய வேண்டிய நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறை செல்வதில் இருந்து விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

உடல்நிலை பாதிப்பு: சிறை செல்வதில் இருந்து விலக்குக் கேட்கும் சரவண பவன் ராஜகோபால்!

கடந்த 2001ஆம் ஆண்டு சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராஜகோபாலிடம் ஜோதிடர் ஒருவர் அறிவுறுத்திய நிலையில், ஏற்கெனவே 2 மனைவிகள் இருந்தும் ஜோதிடர் பேச்சைக் கேட்டு ஜீவஜோதி என்ற பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.

எனினும், ஜீவஜோதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதற்கு பின்னரும் தொடர்ந்து, ஜீவஜோதியின் கணவரையும் ஆட்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஜீவஜோதியின் கணவர் கொடைக்கானல் மலைச் சாலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக காணப்பட்டார்.

இதுதொடர்பாக சரவண பவன் ராஜகோபால், உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஜூலை 7ஆம் தேதிக்குள் சிறை செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவர் சிறை செல்ல விலக்கு கேட்டு இன்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சரணடைவதில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட எந்த உத்தரவாதத்தையும் வழங்காமல் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

.