This Article is From Nov 01, 2019

சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!!

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் முதல்வராக இருந்தபோது உம்மன் சாண்டி சுமார் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!!

நடிகை சரிதா நாயர்.

Coimbatore:

சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரளாவை சேர்ந்தவர் பிரபல நடிகை சரிதா நாயர். அவரும், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் சேர்ந்து சூரிய மின் தகடுகளை பொருத்தும் தொழிலை தொடங்க திட்டமிட்டிருந்தனர். 

இதற்காக போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கிய சரிதா, பெண்கள் மூலமாக அரசியல்வாதிகள், செல்வந்தர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் மூலம் தனது நிறுவனத்திற்கு முதலீட்டை ஈர்த்ததாகவும் குற்றச் சாட்டு எழுந்தது. 

குறிப்பாக, முன் பணத்தை பெற்றுக் கொண்டு சோலார் தகடுகளை பொருத்தாமல் ஏமாற்றியதாக சரிதா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. முதலீடுகளை பெறுவதற்காக சரிதா நாயரிடம் இருந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி ரூ. 1.9 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றார் என்று அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

மொத்தத்தில் ரூ. 10 கோடி அளவுக்கு மோசடி செய்தார் என்பதுதான் சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் மீதுள்ள புகார். ஆனால் இந்த விஷயத்தில் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியின் பெயர் அடிபட்டதால், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். சரிதா விஷயமும் கேரளா முழுவதும் பேசப்பட்டது. 

இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சரிதாவும் அவரது கணவர் பிஜுவும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இருவருக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டத் தவறினால் கூடுதலாக 9 மாதம் அவர்கள் இருவரும் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

.