சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக எழுந்த விவகாரத்தில் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இதில் அரசின் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்துவது, வில்லியின் கதாப்பாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயராக கூறப்படும் கோமள வல்லி என்று பெயர் சூட்டியது, மற்றும் பல அரசியல் தலைவர்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியது என பல சர்ச்சைகள் எழுந்தன.
அதிமுக அரசின் திட்டங்களை விமர்சித்ததால் இதனை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சில காட்சிகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து படம் மீண்டும் வெளியானது.
இதற்கிடையே தன்னை கைது செய்யாமல் இருக்க முருகதாஸ் தரப்பில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளது.