நாங்கள் கண்டிப்பாக தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அமைப்போம், சரோஜ் பாண்டே
New Delhi: சத்தீஸ்கர் மாநில பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரோஜ் பாண்டே, ‘அஜித் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கூட்டு சேர்ந்துள்ளதால், அது காங்கிரஸைத் தான் அதிகம் பாதிக்கும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜய் சபா எம்.பி-யா பாண்டே, ‘காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் மாநில தலைவர் பூபேஷ் பாகல், போலி செக்ஸ் சிடி வழக்கில் சிக்கியுள்ளதால், அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் சத்தீஸ்கரில் மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறோம். இதனால், நாங்கள் கண்டிப்பாக தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அமைப்போம். மொத்தம் இருக்கும் 90 தொகுதிகளில் பாஜக, 65 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர் அமித்ஷா விருப்பம் தெரிவித்திருந்தார். அதை நாங்கள் கண்டிப்பாக செய்து காட்டுவோம்' என்று கூறினார்.
சில வாரங்களுக்கு முன்னர் மாநில பாஜக அமைச்சர் இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தம் உடையவர்களாக கூறி சென்ற மாதம் சிபிஐ, காங்கிரஸ் மாநில தலைவர் பாகலுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் பாகல்.
சத்தீஸ்கரைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் தான் எப்போதும் போட்டி இருந்து வந்தது. ஆனால் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், அக்கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் முதல்வராக இருந்தவருமான அஜித் ஜோகி, தனியாக ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி வைத்துள்ளார். இதனால், இந்த முறை தேர்தலில் ஜனதா காங்கிரஸ்- பகுஜன் சமாஜ் கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அது குறித்து பேசிய பாண்டே, ‘காங்கிரஸ் தரப்பு ஓட்டுகளைத் தான் ஜோகி பிரிப்பார். அது பாஜக-வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.