பாலகோட் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தொடர்பான சாட்டிலைட் படங்கள்
New Delhi: பாலகோட் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் கேட்டுவந்த நிலையில், விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கான சாட்டிலைட் படங்கள் தற்போது வெளி வந்துள்ளன.
கடந்த மாதம் 26-ம்தேதி இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானங்கள் பாலகோட் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலின்போது ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை தவிர்த்து மேலும் சில ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.
90 வினாடிகள் நடந்த இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆதாரங்களை கேட்டு வந்தன. இதற்கு பாஜக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானப்படை தாக்குதலின் செயற்கோள் படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக வெளிவந்த படத்தில் பாலகோட் தீவிரவாத முகாம் எந்த வித சேதமும் இல்லாமல் இருப்பதை காண முடிகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில், தீவிரவாத முகாம்கள் சேதம் அடைந்திருப்பதை பார்க்கலாம்.
முகாமின் கூரையில் பலமாக தாக்கப்பட்டிருப்பது போன்று சாட்டிலைட் படங்கள் காண்பிக்கின்றன.
பாலகோட் விமானப்படை தாக்குதல் தொடர்பான படங்கள் மத்திய அரசு வசம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் அதனை மத்திய அரசு இன்னமும் வெளியிடவில்லை.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. கடந்த திங்களன்று பேட்டியளித்த விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, ''இலக்கு மீது துல்லியமாக தாக்குதல் நடத்தி விட்டோம். அங்கு ஏற்பட்டிருக்கும் சேதம் குறித்து பாகிஸ்தான்தான் சொல்ல வேண்டும். காட்டின் மீது நாம் தாக்கியிருந்தால் பாகிஸ்தான் அதுகுறித்து நம்மை விமர்சிக்க அவசியம் இருந்திருக்காது. அந்நாட்டு நம்மை குற்றம் சாட்டுகிறது என்றால், பாலகோட்டில் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று கூறியிருந்தார்.