சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது, அமெரிக்காவில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “இந்த உயிரிழப்பு லாக்-அப் மரணம் கிடையாது“ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “சாத்தான்குளம் விவகாரத்தில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தால்தான் லாக்-அப் மரணம் என்று பெயர். எனவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைத்தால் உண்மை மக்களுக்கு தெரியும். உடற்கூறு ஆய்வு முதல் அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்து வருகிறது. கனிமொழி எம்.பி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் விமர்சனமாகதான் உள்ளது.“ என அமைச்சர் கடம்பூர் ராஜு குறிப்பிட்டுள்ளார்.