சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு! - விக்கிரமராஜா
ஹைலைட்ஸ்
- வியாபாரிகள் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு!
- ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே.
- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும்
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதைத்தொடர்ந்து, சிறையில் வைத்து போலீசார் தாக்கியதே அவர்கள் இருவர் உயிரிழப்புக்கும் காரணம் என்றும் இருவரையும் அடித்துக் கொன்ற போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள் நேற்று உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, நீதித்துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
இதனிடையே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றை தினம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இது போன்ற அநீதி வரும்காலத்திலும், எக்காலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.
தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்கு அந்தந்த சங்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். இந்த ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே.
தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேரடியாக பேரமைப்பு நிர்வாகிகள் சென்று புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும். எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.