This Article is From Nov 22, 2018

'ஏன் சட்டமன்றத்தை கலைத்தேன்!’- ஜம்மூ காஷ்மீர் ஆளுநர் மாலிக் விளக்கம்

நேற்று ஜம்மூ காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், மாநில சட்டமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார்

'ஏன் சட்டமன்றத்தை கலைத்தேன்!’- ஜம்மூ காஷ்மீர் ஆளுநர் மாலிக் விளக்கம்

நேற்று ஜம்மூ காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், மாநில சட்டமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார்

Srinagar:

நேற்று ஜம்மூ காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், மாநில சட்டமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார். அவரின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்நிலையில் சட்டமன்றம் எதற்காக கலைக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநர் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வித்தியாசமான கொள்கைகளும் கோட்பாடுகளும் கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைப்பது என்பது முடியாத காரியம். மேலும், கட்சிகளுக்கு இடையில் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெறுவதற்காக குதிரை பேரம் நடந்து வந்ததாகவும் எனக்குத் தகவல் வந்தது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்கான நடவடிக்கை அதிகமாக இருக்க வேண்டிய நேரத்தில் மிகவும் ஸ்திரமான ஒரு அரசு பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால், பல அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைத்தால், அது நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவு' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மூ - காஷ்மீரில் நீண்ட நாள் அரசியல் எதிரிகளாக இருந்து வரும் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹுபூபா முப்டி ஆகியோர் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முன் வந்தனர். இருவரது கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டது. இன்னொரு புறம் மக்கள் கான்ஃபெரன்ஸ் கட்சியின் சாஜத் லோன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். அவருக்கு பாஜக-வின் ஆதரவு இருந்தது. இதையடுத்துதான், ஆளுநர் சட்டசபை கலைக்கும் முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து பாஜக அதற்கு ஆதரவாக ட்வீட்டியது, ‘எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இந்த சூழலில் நிலையான அரசு அமையாது. இப்படிப்பட்ட சமயத்தில் மீண்டும் தேர்தல் நடத்துவதுதான் சரியாக இருக்கும்' என்று கூறியுள்ளது.

மெஹுபூபா முப்டி மற்றும் ஓமர் அப்துல்லா, ஆளுநரின் முடிவை விமர்சனம் செய்த நிலையில் காங்கிரஸ் வித்தியாசமாக ஒரு கருத்தைத் தெரிவித்தது. அக்கட்சியின் முக்கிய தலைவர் குலாம் நபி ஆசாத், ‘பிடிபி ஆட்சி அமைக்க ஆர்வமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆர்வமாக இல்லவே இல்லை. நாங்கள் கொடுத்தது ஒரு பரிந்துரை தான்' என்று கூறியுள்ளார்.

ஆளுநரின் ஆட்சி கலைப்பு உத்தரவால், அடுத்த 6 மாதங்களில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும். ஆளுநர் ஆட்சியின் ஆயுட்காலம் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் ஆட்சி அமலுக்கு வரும்.

.