This Article is From Feb 16, 2019

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கு செல்ல தயங்கும் சவுதி இளவரசர்!

சல்மான், அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறார்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, சர்வதேச நாடுகளுக்கு, ‘பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க அழுத்தம் கொடுங்கள்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது

ஹைலைட்ஸ்

  • இன்று பாகிஸ்தானின் முக்கிய நிர்வாகிகளை சல்மான் சந்திக்க இருந்தார்
  • நேற்று முன் தினம் புல்வாமா தாக்குதல் நடந்தது
  • தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
New Delhi:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், வியாழக் கிழமை தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தனது பாகிஸ்தான் பயணத்தை சவுதி அரேபிய நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் ரத்து செய்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இளவரசர் சல்மான், நாளை பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இன்று சல்மான், தனது நாட்டு வியாபார பிரமுகர்களுடன் பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டின் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தரப்பு தற்போது வெளியிட்டுள்ள தகவல்படி, ‘சவுதி இளவரசர் சல்மானின் இன்றைய பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கிறோம். அவரது பயணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரேபியா, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முன்னேற்ற 6 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக தெரிவித்தது. மேலும் பாகிஸ்தானின் கவாடாரில் பெட்ரோல் நிறுவனம் ஒன்றை உருவாக்க 10 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாகவும் தெரிவித்தது. 

‘எங்கள் நாட்டின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய சவுதி தரப்பு மிகவும் ஆர்வமாக இருக்கிறது' என்று சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் முதலீடு அமைச்சர் ஹரூன் ஷரீப் தகவல் கூறினார். 

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, சர்வதேச நாடுகளுக்கு, ‘பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க அழுத்தம் கொடுங்கள்' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இளவரசர் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சல்மான், அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறார். சவுதி, இந்தியாவுக்குத்தான் அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அது குறித்தும் இன்னும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தியப் பயணத்தின் போது சல்மான் விவாதிப்பார் என்று தெரிகிறது.

.