ஹைலைட்ஸ்
- சவூதியிலிருந்து வந்த ஹபிப் கைது செய்யப்பட்டார்
- லஷ்கர் தீவிரவாத அமைப்புடன் ஹபிபுக்கு தொடர்பு, என்ஐஏ
- லஷ்கர் தீவிரவாதிக்கு ஹபிப் உதவிபுரிந்தார், என்ஐஏ
New Delhi: பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி விமானநிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
ஹபிபுர் ரஹமான் எனப்படும் ஹபிப் எனப்படும் நபர்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒடிசா மாநிலம் கெண்டாரபாரா பகுதியில் வசித்து வந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் சவூதி அரேபியாவில் இருக்கும் ரியாத்தில் வசித்து வந்தார் எனக் கூறப்படுகிறது.
லஷ்கர்-இ-தய்பா அமைப்பின் தீவிரவாதி ஷேக் அப்துல் நயீம் என்பவருக்குக் கீழ் ஹபிப் இருந்துள்ளார் எனப்படுகிறது. நயீம், கடந்த 2007 ஆம் ஆண்டு, வங்க தேசத்திலிருந்து 3 தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் கொண்டு வர முயன்றபோது கைது செய்யப்பட்டார். ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு நயீம், போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அவர் பாகிஸ்தான் மற்றும் சவூதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் வழிகாட்டுதல்படி, இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தியாவில் தாக்குதல் நடத்த ஏற்ற இடங்களை கண்டுபிடிக்க நயீம் பணிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் பல்வேறு அடையாளங்களுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேவு பார்த்துள்ளார். ஜம்மூ-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிங்களுக்கு நயீம் பயணப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
நயீமின் இந்தப் பயணங்களுக்கு ஹபிப் தங்கும் இடங்களையும் நிதித் தேவையையும் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். நயீமும் ஹபிப்பும் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் தீவிரவாதியான ரெஹன் எனப்படும் அம்ஜத் வழிகாட்டுதல்படி நடந்து வந்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு கூறுகின்றது.
என்.ஐ.ஏ, நயீமை கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்தது. அப்போது நயீம், ஹபிப் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.