“பிரிட்டிஷ்காரர்களிடம் எனது தாத்தா சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாக திரும்பத் திரும்ப சொல்கிறார் ராகுல் காந்தி"
Mumbai: இந்துத்துவ கொள்கையின் முன்னோடியான சாவர்க்கர் (Savarkar) பற்றி சில நாட்களுக்கு முன்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி (Rahul gandhi). அவரின் பேச்சு வலதுசாரி அமைப்புகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “ராகுல் காந்தியை பொது இடத்தில் வெளுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்த ‘பாரத் பசாவ்' பேரணியில் பேசிய ராகுல், “நான் ‘ரேப் இன் இந்தியா' என்று நாட்டின் அவலநிலையைச் சுட்டிக் காண்பித்தமைக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கேட்கின்றனர். உண்மையைப் பேசியதற்காக நான் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த காங்கிரஸ் காரனும் மன்னிப்பு கேட்க மாட்டான். என் பெயர் ராகுல் காந்தி. ராகுல் சாவர்க்கர் அல்ல,” என்றார்.
இதைத் தொடர்ந்து ரஞ்சித் சாவர்க்கர், “பிரிட்டிஷ்காரர்களிடம் எனது தாத்தா சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாக திரும்பத் திரும்ப சொல்கிறார் ராகுல் காந்தி. சிறையிலிருந்து வெளியே வருவதற்கு எனது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போட்ட நிபந்தனைகளுக்கு மட்டும்தான் சம்மதித்தார். ஆனால், அவர் பிரிட்டிஷிடம் எப்போதும் மன்னிப்பு கேட்டதே இல்லை,” என்றார்.
மேலும் அவர் சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி அரசின் முதல்வராகவும் இருக்கும் உத்தவ் தாக்கரேவுக்கு, “சாவர்க்கரைக் கொச்சைப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் பொது இடத்தில் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.