This Article is From Feb 19, 2020

சிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் கூறுங்கள்? திமுகவை விளாசிய எடப்பாடி!

தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம்.

சிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் கூறுங்கள்? திமுகவை விளாசிய எடப்பாடி!

குடியுரிமை திருத்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சொல்லுங்கள், நாங்கள் தீர்வு காண்கிறோம் என சட்டப்பேரவையில் திமுகவினரை நோக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக இஸ்லாமியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசும்போது, ”குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருக்கிறீர்கள். மத்திய அரசுக்கு பயந்துதான் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவில்லை” என்றார். 

இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியதாவது, இதையே சொல்லி, சொல்லி நீங்கள் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சொல்லுங்கள், நாங்கள் தீர்வு காண்கிறோம். 

தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். அதை விட்டுவிட்டு, மக்களை ஏமாற்றி, நாடகமாடி, தவறான, அவதூறான செய்தியை சொல்லி இன்றைக்கு நல்ல அமைதியாக வாழ்கின்ற நம்முடைய மாநிலத்தில் குந்தகம் ஏற்படுகின்ற நிலையை ஏற்படுத்துகிறீர்கள். 

என்ன சொல்லுங்கள், யார் பாதித்து இருக்கிறார்கள், விளக்கம் சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன் என ஆவேசமாக கூறினார்.

இதற்கு மனோ தங்கராஜ்: பாதிப்பு இருப்பதால் தான் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி, இப்போது நீங்கள்  வெளிநடப்பு செய்தீர்கள். என்ன சொன்னீர்கள், இரட்டை குடியுரிமை வழங்கக்கூடிய அதிகாரம் மத்தியிலே இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படி பார்த்தால், குடியுரிமை திருத்த சட்ட விவகாரமும் மத்திய அரசிடம் தான் இருக்கிறது,

மாநிலத்தில் அல்ல. நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டு வெளியே சென்றீர்கள். மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி நடிக்கவில்லை என்று அவர் கூறியுளாளர்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திமுகவுக்கு எதிராக ஆவேசமாக முதல்வர் பேசுவதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

.