கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றச்சாட்டை சுமத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. அங்கு கடந்த 2017-ல் கொள்ளை சம்பவம் நடந்ததில் முக்கிய ஆவணங்கள் மாயமானதாக கூறப்பட்டது.
இதனை மறைக்க ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் உள்பட 5 பேர் கொலை செய்யப்பட்டதாக வழக்கின் முக்கிய குற்றவாளி சயான், மனோஜ் மற்றும் தெகல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ ஆகியோர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக கடந்த 11-ம்தேதி ஆவணப்படம் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இவர்கள் 3 பேர் மீதும் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் டெல்லிக்கு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று தனிப்படை போலீசார் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இன்று இருவரும் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.