தற்போது தலைமை நீதிபதியுடன் மொத்தம் 31 நீதிபதிகள் உள்ளனர்.
New Delhi: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதியுடன் சேர்த்து 31-லிருந்து 34-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் தலைமை நீதிபதியும் அடங்குவார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியிருந்தார்.
பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி எழுதியிருந்த கடிதத்தில், 'சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 1988-ல் நீதிபதிகளின் எண்ணிக்கை 18-லிருந்து 26-ஆக உச்ச நீதிமன்றத்தில் உயர்த்தப்பட்டது. அடுத்தாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் எண்ணிக்கை 26-ல் இருந்து 31 ஆக உயர்த்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கைய உயர்த்தினால்தான் மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும். எனவே இதனை முக்கிய விவகாரமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 11-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் 59 ஆயிரத்து 331 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.