New Delhi: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139 அடியாக வைத்திருக்குமாறு உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற கமிட்டி, தமிழக அரசு 139.9 அடிவரை நீர் தேக்கி வைக்கை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தது.
முன்னதாக நேற்று கேரளா தரப்பில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு குறைக்கு வேண்டும் என, கேரள அரசு செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, கேரளாவில் வெள்ளம் ஏற்பட முல்லை பெரியாறு அணையில் அதிக அளவு நீர் தேக்கி வைத்ததும் ஒரு காரணம் என கேரள அரசு குற்றம் சாட்டியது. முல்லை பெரியாறில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி அணையில் நீர் அளவு அதிகரித்து, அந்த அணையையும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
மேலும், 136 அடிக்கு நீர் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விடக் கூறிக் கேட்டுக் கொண்டோம். 139 அடி வந்த போதும் கேட்டோம். ஆனால், தமிழகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேரள தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு ஆகஸ்ட் 16-ம் தேதி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால் வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் அல்ல என்றும் வாதிட்டது.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களின் பாதுகாப்பை தான் நாங்கள் முக்கியமாக கருதுகிறோம் என்றார் நீதிபதி தீபக் மிஸ்ரா. வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீர் இருப்பை 139 அடி ஆக வைத்திருக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 6-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.