This Article is From Mar 26, 2019

குக்கர் சின்னம் ஒதுக்க மறுப்பு! - பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குக்கர் சின்னம் ஒதுக்க மறுப்பு! - பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதில், ''இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையம் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது. தொடர்ந்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் சரியான பதிலளித்து வந்தது. அமமுக பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி என்பதை முக்கிய காரணமாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அப்போது, கட்சியை பதிவு செய்தால், குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனடியாக தர முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பு, அமமுக கட்சியை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தரமுடியாது என்றும் சின்னத்தை ஒதுக்க 30 நாட்கள் ஆகும் வாதம் செய்தது. குக்கர் இல்லையென்றால், வேறு ஒரு சின்னத்தை பொதுசின்னமாக வழங்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமமுக பதிவு செய்யப்படாத நிலையில் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்பட்டு தனி தனி சின்னம் தான் தர முடியும். பொதுசின்னம் தர முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, தீர்ப்பளித்த நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தினகரனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து, அமமுக கட்சி பதிவு செய்யப்படும் நிலையில், காலத்தை கருத்தில் கொண்டு டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

.