ஹைலைட்ஸ்
- கூடங்களம் அணு உலைக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதாடினார்
- தற்காலிகமாக அணு உலையை மூட வலியுறுத்தி பிரஷாந்த் பூஷன் வாதாடினார்
- 2013-ல் எரிபொருள் சேமிப்புக்கு இடம் அமைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்திய அணுமின் உற்பத்தி கழகத்தை, வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் கூடங்களம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிப்பதற்கு ஏதுவாக ஒரு இடத்தை அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
முன்னர் இது தொடர்பான வழக்கு 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘2018 ஆம் ஆண்டுக்குள் கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிப்பதற்கு பாதுகாப்பான ஒரு இடத்தைக் அமைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஆனால், இந்திய அணுமின் உற்பத்தி கழகம் அதை நிறைவேற்றத் தவறவிட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அணுமின் உற்பத்தி கழகம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மிஸ்ரா, ‘எரிபொருள் சேமிப்புக்கான இடத்தை அமைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டார்.
ஆனால் இதற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ‘அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளும் நிறைய வெப்பத்தையும் கதிர்வீச்சையும் வெளியிடக் கூடியது. அவை அணு உலைக்கு அருகில் சேமிப்பது என்பது பாதுகாப்பானது அல்ல. அப்படிச் செய்வதால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. அணுமின் கழகம், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமித்துக் கொண்டே போக முடியாது. அவை நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யும் வரை கூடங்குளம் அணு உலையை மூடி வைக்க வேண்டும். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து கூடங்குளம் அணு உலை 70 முறைக்கும் மேல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிக்குள் கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்க ஏதுவான ஒரு இடத்தைக் அமைக்க வேண்டும். கண்டிப்பாக அதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட மாட்டாது’ என்று தீர்ப்பு வழங்கியது.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)