டெல்லியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும் தீபக் மிஸ்ரா
New Delhi: சபரி மலைக்கு வயது வேறுபாடின்றி பெண்கள் அனைவரும் செல்லலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
பாலின நீதியைப் பெற்றுதந்த வீரர் என்று என்னை சொல்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை ஒதுக்கி வைக்க முடியாது. வாழ்வில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. ஆணைப்போல பெண்களும் சமம்.
நாம் சகிப்புத் தன்மையை பின்பற்றி நடக்க வேண்டும். மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதனை செய்யாவிட்டால் நாம் அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர்களை போல் ஆகி விடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.