This Article is From Sep 06, 2018

செயற்பாட்டாளர்கள் செப்டம்பர் 12 வரை வீட்டுக் காவல்: உச்ச நீதிமன்றம்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி புனே காவல் துறை, 5 பிரபலமான செயற்பாட்டளர்களை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தது

செயற்பாட்டாளர்கள் செப்டம்பர் 12 வரை வீட்டுக் காவல்: உச்ச நீதிமன்றம்
New Delhi:

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி புனே காவல் துறை, 5 பிரபலமான செயற்பாட்டளர்களை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தது. அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து அதை செப்டம்பர் 12 வரை நீட்டித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்,  செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர் தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை புனே காவல் துறை தரப்பு, ‘ செயற்பாட்டாளர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பீமா- கொரேகன் வன்முறையில் சம்பந்தப்பட்டதாக ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது இந்த கைது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மாவோயிசம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

 செயற்பாட்டாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் மூலம், கைது வாரன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். மேலும் கைதிகள் பிணையில் வெளியே வர முடியாது. போலீஸ் தரப்பும் 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. 

இது குறித்தான வழக்கில் முன்னர் உச்ச நீதிமன்றம், செயற்பாட்டளர்களை 6 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிரா அரசு தரப்பு, ‘வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நேரத்தில்  செயற்பாட்டாளர்கள் வீட்டுக் காவலில் வைப்பது விசாரணைக்கு நல்லது’ என்று கூறியது. இதைக் கேட்டுக் கொண்ட நீதிமன்றம், வரும் 12 ஆம் தேதி வரை 5 செயற்பாட்டளர்களுக்கும் போடப்பட்டுள்ள வீட்டுக் காவல் உத்தரவு தொடரும் என்று தெரிவித்துள்ளது. 

.