This Article is From Nov 24, 2018

புயல் நிவாரணம் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!

கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

Advertisement
தெற்கு Posted by

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிட்டு உரிய இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெள்ளச்சாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் தஞ்சை மாவட்டத்தில் 83 கிராமங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 கிராமங்களும், நாகை மாவட்டத்தில் 87 கிராமங்களும் பெருத்த சேதங்களை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கிராமங்களில் உள்ள 2 லட்சம் தென்னை மரங்கள் கஜா புயலால் அழிந்துள்ளதாகவும், அதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், புயல் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாகவும், அந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி தலைமையிலான அமர்வு கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement