New Delhi: ரஃபேல் விவகாரம் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், ஒப்பந்தம் குறித்த விளக்கத்தை மத்திய அரசிடம் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஷர்மா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'ரஃபேல் ஒப்பந்தத்தில் 59,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
2016 ஆம் ஆண்டு, பிரான்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது, ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மனுதாரர் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை. அதனால், மத்திய அரசை இந்த விவகாரத்துக்குள் கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில், ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இது குறித்து அரசுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை' என்று தெரிவித்தது.
வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால், 'ரஃபேல் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் அடங்கியுள்ளன. தேர்தல் வரவுள்ள நிலையில், நீதிமன்றம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது' என்று வாதிட்டார்.