This Article is From Jan 03, 2020

ஊராட்சித் தலைவர் தேர்தலில் 10 வாக்குகள் பெற்று பட்டியலின பெண் வெற்றி!

சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரட்சியிலுள்ள 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

ஊராட்சித் தலைவர் தேர்தலில் 10 வாக்குகள் பெற்று பட்டியலின பெண் வெற்றி!

மொத்தம் 6 பேர் மற்றும் ஊர்மக்கள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வாக்களித்திருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவர், 10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

திருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட 11 ஊராட்சிகளில் 6 வார்டுகளைக் கொண்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு மொத்தமுள்ள 785 வாக்காளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவராவர். 

இந்தநிலையில், சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரட்சியிலுள்ள 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
ஆனால், தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி (32) மற்றும் சுந்தராச்சி (50) என்ற இருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

இதைத்தொடர்ந்து, ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திடும் வகையில் தேர்தலை புறக்கணிப்பதோடு, அப்பகுதி மக்கள் பிச்சிவிளை கிராமத்தில் கருப்புக் கொடியும் கட்டியிருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி நடந்த வாக்குப் பதிவில் பிச்சிவிளை தலைவர் பதவிக்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுந்தராச்சி மற்றும் ராஜேஸ்வரி, அவரை சார்ந்தவா்கள் என மொத்தம் 6 பேர் மற்றும் ஊர்மக்கள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வாக்களித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பதிவான 13 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாத வாக்கு ஆகும். மீதமுள்ள 12 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தோஷ் வழங்கினார்.  

.