New Delhi: ஆதார் அட்டை இல்லை என்பதைக் காரணமாகக் கொண்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது என்று ஆதார் வழங்கும் யுஐடிஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது
இதுகுறித்து ஆதார் நிறுவனம் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ''ஆதார் அட்டை இல்லை என்பதால் சில பள்ளிகள் மாணவர்களைச் சேர்க்க மறுத்து விடுகின்றன. ஆதார் அட்டை இல்லை என்பதைக் காரணமாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை மறுக்கக்கூடாது. சட்டப்படி அது தவறானது. எனவே, ஆதார் அட்டையை மாணவர்கள் பெறும்வரை மற்ற வகையான அடையாள அட்டைகளைப் பெற்று சேர்க்கைகளை அனுமதிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது
மேலும், “பள்ளிகளே உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், மாநிலக் கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தலாம். அதன்மூலம் ஆதார் அட்டையைப் பெறுவது, தவறுகளை நீக்கி சரியான ஆதார் அட்டையைப் பெறுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது