This Article is From Apr 19, 2020

ஆனந்த் டெல்டும்டே கைதுக்கு கொந்தளித்த சீமான்!

ஆனந்த் டெல்டும்டே மீது தொடுக்கப்பட்டிருக்கும் இக்கொடிய அடக்குமுறையைத் தளர்த்தி அவர் மீதான வழக்கினை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்

Advertisement
தமிழ்நாடு Posted by

ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் சீமான் (கோப்பு)

சமூக செயற்பாட்டாளரான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே சமீபத்தில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்குப் பலரும் கண்டன குரலை எழுப்பியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

நாடறிந்த சிந்தனையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், மாந்தநேய படைப்பாளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கோரேகான் கலவரத்தைத் தனது பேச்சின் மூலம்  துண்டியதாகக்கூறி அவரை மத்தியப் புலனாய்வு அமைப்பு கைது செய்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் நடந்தேறிய போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றி, கலவரமாக்கிய மதவாதிகளின் செயல்களுக்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்து கைது செய்யக் கோரியபோதும் அவர்களைக் கைது செய்யாத இந்நாட்டின் ஆட்சியதிகாரம், ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்தியல் கலகம் செய்திட்டதால் பேராசிரியர் ஆனந்த் மீது பொய்யாக வழக்கைப் புனைந்து கைது செய்திருக்கிறது.

மாட்டிறைச்சி உண்டதற்கெதிராகவும், ஜெய்ஸ்ரீராம் எனக்கூற வற்புறுத்தியும் முறையே உழைக்கும் மக்கள் மீதும், இசுலாமிய மக்கள் மீதும் என நாள்தோறும் நடந்தேறும் கொடிய வன்முறைகளையும் சகிப்புத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் இக்கோரதாக்குதலையும் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ஆட்சியாளர்கள்  பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Advertisement

மதவாதத்திற்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், கருத்தியல் கிளர்ச்சி செய்திட்ட நரேந்திர தபோல்கர், கல்புர்கிஈ, கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் ஆயுதத்தினால் தாக்குதல் தொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போல ஆனந்த் டெல்டும்டே சட்டத்தின் பெயரால் வழக்கு தொடுக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகி பிணைக்கப்பட்டிருக்கிறார்.

பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்திருக்கும் இந்த நடவடிக்கை இந்தியா முழுவதுமுள்ள முற்போக்காளர்கள், அறிஞர் பெருமக்கள், மண்ணுரிமை போராளிகள் என யாவரையும் மிகப்பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் யாவரும் இக்கைதிற்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார்கள். அதனை முழுமையாக ஆதரித்து அவர்களது கோரிக்கையோடு நாம் தமிழர் கட்சி கரம் கோர்க்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலிருக்கும் இக்காலகட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் இக்கைது நடவடிக்கை சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும்.

Advertisement

ஆகவே, ஆனந்த் டெல்டும்டே மீது தொடுக்கப்பட்டிருக்கும் இக்கொடிய அடக்குமுறையைத் தளர்த்தி அவர் மீதான வழக்கினை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என தனது கண்டனத்தை சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement