புழல் சிறையில் இருக்கும் கைதிகள், அங்கு அனுபவித்து வரும் வசதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலான சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இதையடுத்து தமிழக சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கைதிகள் தாங்கள் சாப்பிடும் பல வகையிலான வீட்டு உணவு, டிவி, போன் மற்றும் பிற வசதிகளை படம் பிடித்துள்ளனர். இந்தப் படங்கள் பொதுத் தளத்தில் பகிரப்பட்டு வைரலானது. இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து தற்போது கோயம்புத்தூர், சேலம் மற்றும் கடலூரில் இருக்கும் சிறைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சிறைக்குள் தடை செய்யப்பட்டுள்ள செல்போன், சிகரெட் உள்ளிட்டப் பொருட்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக சிறைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று கூறியுள்ளார்.
‘புழல் சிறையில் சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் 18 தொலைக்காட்சிப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல புழல் சிறையில் இருந்த 5 கைதிகள் பாளையங்கோட்டை, சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார் சிறை அதிகாரி ஒருவர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)