This Article is From Oct 14, 2019

48,000 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்… 10 நாட்களாக ஸ்டிரைக்… 2 பேர் தற்கொலை - Telangana-வில் பதற்றம்!

TSRTC Strike - அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 21 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

48,000 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்… 10 நாட்களாக ஸ்டிரைக்… 2 பேர் தற்கொலை - Telangana-வில் பதற்றம்!

தெலங்கானாவின் (Telangana) போக்குவரத்துக் கழகமான (Telangana State Road Transport Corporation) TSRTC-ஐச் சேர்ந்த சுமார் 48,000 ஊழியர்கள், பல்வேறு குறைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த 5 ஆம் தேதி ஆரம்பித்தனர்

Hyderabad:

கடந்த சனிக்கிழமை தெலங்கானா (Telangana) அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த ஒரு பேருந்து ஓட்டுநர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஐதராபாத்தைச் (Hyderabad) சேர்ந்த இன்னொரு நடத்துநர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகமான TSRTC ஊழியர்கள், கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஆரம்பித்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்ததில் இருந்து ஏற்பட்ட இரண்டாவது தற்கொலை சம்பவம் இது. 

சுரேந்திர கவுட் என்கிற அந்த அரசு போக்குவரத்து நடத்துநர், தனது செப்டம்பர் மாத ஊதியத்தைப் பெறவில்லை என்றும், அதனால், கடனைக் கட்ட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாக கவுட் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

தெலங்கானாவின் (Telangana) போக்குவரத்துக் கழகமான (Telangana State Road Transport Corporation) TSRTC-ஐச் சேர்ந்த சுமார் 48,000 ஊழியர்கள், பல்வேறு குறைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த 5 ஆம் தேதி ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் (K Chandrasekhar Rao), அனைவரையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். 

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ், “பண்டிகை நாட்களில் இதைப் போன்று ஒரு காரியத்தில் ஈடுபட்டதும், போக்குவரத்துக் கழகம், 1,200 கோடி ரூபாய் நஷ்டத்திலும் இருக்கும்போது இப்படி ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். போக்குவரத்துக் கழகத்தின் கடன் சுமை மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாயாகும். பணி நீக்கம் செய்த ஊழியர்களோடு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை” என்று திட்டவட்டமாக கூறினார். 

போக்குவரத்து ஊழியர்களின் தற்கொலை சம்பவத்தை தெலங்கானா மாநில பாஜக, கடுமையாக சாடியுள்ளது. ‘அரசு நடத்திய கொலை' என்று இச்சம்பவம் குறித்து கூறியுள்ளது பாஜக. தெலங்கானா அரசு தரப்போ, தங்களது அரசியல் ஆதயத்துக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக, போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளது என குற்றம் சாட்டுகிறது.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 21 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

.