Read in English
This Article is From Dec 29, 2018

சாத்தூர் கர்ப்பிணியை தொடர்ந்து, சென்னை பெண்ணுக்கும் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதா?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்தோ, மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம் மூலமாகவோ அப்பெண்ணுக்கு எச்ஐவி பரவ வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா
Chennai:

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 4 மாத கர்ப்பிணியாக இருந்த போது கடந்த ஏப்ரல் மாதம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பு எச்ஐவி தொற்று இல்லாத பெண்ணுக்கு, ஆகஸ்ட் மாதம் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டபோது ஹெச்ஐவி உறுதி செய்யப்பட்டது.

ரத்தம் குறைவாக உள்ளது என்று கூறி ரத்தம் ஏற்றிய போது எச்ஐவி பரவியதாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தா மணி கூறியதாவது, மாங்காடு பகுதியைச் சேர்ந்த லதா கொண்டு வந்த ஆவணத்தில் எச்ஐவி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார மையம், மாங்காடு அரசு மருத்துவமனை என பல இடங்களில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவ ஆவணங்களிலும் முகவரியை மாற்றி மாற்றிக் கொடுத்துள்ளார். லதாவுக்கு எச்ஐவி பாதித்திருந்தும், அப்பெண்ணின் குழந்தைக்கு எச்ஐவி பாதிக்காமல் பிரசவம் பார்த்தோம்.

Advertisement

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்தோ, மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம் மூலமாகவோ அப்பெண்ணுக்கு எச்ஐவி பரவ வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநில மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்னும் 4 வாரத்திற்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரத்த மாதிரிகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மறு ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Advertisement