சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சம்பிரதாயத்திற்கு நடப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டில் ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது ஒரு சடங்கு, சம்பிரதாயம், வீணான செலவு என்று நான் கருதுகிறேன். கடந்த முறை நடைபெற்ற மாநாட்டின்போது ரூ. 2.30 லட்சம் கோடி முதலீடு வந்ததாக கூறுகிறார்கள்.
இதனை எந்தெந்த நாட்டில் இருந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்துள்ளனர். என்னென்ன தொழில்களை தமிழ்நாட்டில் தொடங்கினார்கள். எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு செலவில் தொழில்கள் தொடங்கப்பட்டன? என்பதுபோன்ற புள்ளி விவரங்களை மக்களிடம் கூறி விட்டு, இந்த மாநாட்டை நடத்தினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.