ஜாபர்பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது
New Delhi: டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது.
இதனிடையே, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இதனால், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கதல் நடத்தினர். கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்த தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
டெல்லி போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன் மற்றும் பஞ்சாபில் அமரீந்தர் சிங் ஆகிய மூன்று மாநில முதல்வர்கள் குடியுரிமைச் திருத்த சட்டத்தை, தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மோதல் காரணமாக டெல்லியின் முக்கிய இடங்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்து நடைபெற்ற போராட்டத்தின் போது சீலபம்பூர் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு்ள்ளன. போராட்டக்காரர்களை பறக்கும் கேமராக்களை இயக்கி போலீஸ் கண்காணித்து வந்தனர்.
மேலும் நேற்று டெல்லியின் ஜாபர்பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் கலைத்தனர்.
With input from PTI