பிரியங்கா காந்தியின் டெல்லி லோதி எஸ்டேட் இல்லத்தில் சம்பவம் நடந்துள்ளது.
New Delhi: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் வீடு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ளது. இங்கு இன்று மர்ம கார் ஒன்று திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு குறைபாடு என்று காங்கிரசார் கண்டித்து வருகின்றனர்.
பிரியங்கா காந்தியின் உயிருக்கு அச்சம் இருப்பதால் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாத்த SPG சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் சில காரணங்களால், அந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டு Z-ப்ளஸ் பாதுகாப்பு பிரியங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை பிரியங்காவை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் மர்ம கார் ஒன்று பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. லோதி எஸ்டேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த கார், தோட்டத்தின் வலப்புறமாக திரும்பியுள்ளது.
அதில் இருந்தவர்கள் சர்வ சாதாரணமாக பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாதுகாப்பு குறைபாடு கடந்த 25-ம்தேதி நடந்திருப்பதை பிரியங்கா காந்தியின் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. மிக முக்கிய வி.ஐ.பி.க்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதை காங்கிரசார் பலர் கண்டித்து வருகின்றனர்.