This Article is From Oct 27, 2018

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை!

துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ளார்

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

Srinagar:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் மின்நிலையம் ஒன்றின் பாதுகாப்புக்காக பணியில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

நவ்காம் பகுதியில் உள்ள மின் நிலையம் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் ராஜேஸ் குமார் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாயந்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் 50 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் அந்த பகுதியில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 10 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 10 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

.