This Article is From Sep 27, 2018

பிரதமர் மோடிக்கு எதிராக ‘அவதூறான’ கருத்து… திவ்யா மீது தேசத்துரோக வழக்கு!

மோடிக்கு எதிராக அவதூறான கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு, திவ்யா ஸ்பந்தனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

பிரதமர் மோடிக்கு எதிராக ‘அவதூறான’ கருத்து… திவ்யா மீது தேசத்துரோக வழக்கு!

எப்.ஐ.ஆர் பதிவு செய்தவர்களுக்கு நன்றி, திவ்யா

ஹைலைட்ஸ்

  • 67 மற்றும் 124ஏ பிரிவுகளுக்குக் கீழ் திவ்யா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
  • ரஃபேல் பூதாகரமான நிலையில் திவ்யா, மோடிக்கு எதிராக ட்வீட்டியிருந்தார்
  • எப்.ஐ.ஆர் பதிவு செய்தவர்களுக்கு நன்றி, திவ்யா
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நடிகையும் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பொறுப்பாளருமான திவ்யா ஸ்பந்தனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில், மோடி தன் மெழுச்சிலையில், ‘சோர்’ என்று எழுதுவது போல் எடிட் செய்யப்பட்டிருந்தது. ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும் ‘சோர்’ என்ற வார்த்தைக்கு திருடன் என்று பொருள். படத்துடன் #ChorPMChupHai என்ற ஹாஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து லக்னோவைச் சேர்ந்த சையத் ரிஸ்வான் அஹ்மத் என்கிற வழக்கறிஞர், அங்கு உள்ள காவல் நிலையத்தில் திவ்யாவுக்கு எதிராக புகார் அளித்தார். இதனால் திவ்யா மீது பிரிவு 67 மற்றும் தேசத்துரோக குற்றப் பிரிவான 124ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

வழக்கு தொடர்ந்ததை அடுத்து அஹ்மத், ‘மோடி, ஒரு கட்சிக்கு மட்டுமல்ல, மொத்த நாட்டுக்கும் பிரதமர் ஆவார். அவருக்கு எதிராக தரக்குறைவாக பதிவுகள் இடுவது தவறு. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். திவ்யாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். 

அஹ்மத் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் ஆதரவுக்கு நன்றி மக்களே. யாருக்கெல்லாம் நான் பதிவிட்ட ட்வீட் பிடிக்கவில்லையோ, அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தேசத்துரோக வழக்கை இந்தியா தடை செய்ய வேண்டும். அது தொடர்ந்து தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. என் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தவர்களுக்கு, பிரதமர் ஒரு திருடன் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். 

.