பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Patna: இயக்குனர் மணிரத்னம், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் போலீசார் முடிவு செய்துள்ளனர். புகார் அளித்தவர் தவறான தகவல்களை அளித்தார் என்பதன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர குமார், NDTV க்கு அளித்த பேட்டியில், 'புகார் செய்திருப்பவர் தவறான தகவல்களை அளித்திருக்கிறார். விளம்பரத்திற்காக அவர் இதனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் பரிந்தரை செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
கூட்டு வன்முறைக்கு (Mob Violence) எதிராக குரல் கொடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) சில வாரங்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் மாநில முசாஃபர்பூர் காவல் நிலையத்தில், தேசத் துரோக வழக்கு (Sedition Case) தொடரப்பட்டது.
சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் பிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த மாஜிஸ்த்ரேட் சூர்ய காந்த், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
ஓஜா தனது மனுவில், “நாட்டின் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் துடிப்பு மிக்கச் செயலையும் அவர்கள் தாழ்த்திக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பிரிவுக்குச் சாதகமாக அவர்கள் செயல்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது தேசத் துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், நடிகை சுமித்ரா சேட்டர்ஜி, சுபா முத்கல் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அவர்கள் எழுதிய கடிதத்தில், “முஸ்லிம்களுக்கு, தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எதிர் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம், வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.