This Article is From Aug 30, 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Palanisamy) உடை குறித்து கேலி- பொங்கியெழுந்த சீமான் (Seeman)!

"எந்தவித வேலையும் இல்லாதவர்களே இதைப் போன்று விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவார்கள்."

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Palanisamy) உடை குறித்து கேலி- பொங்கியெழுந்த சீமான் (Seeman)!

"இது நோய்மை கொண்ட மனம் படைத்தவர்கள் செய்யும் செயல்”

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். லண்டனில் முதல்வர் பழனிசாமி, கோட் - சூட் உடையுடன்தான் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். அவரது உடையை கேலி செய்யும் விதத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆயிரம் இருந்தாலும் என் நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. என் மண்ணின் முதன்மை அமைச்சர் அவர். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர் குளிர் தாங்காமலோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ அந்நாட்டு உடையை அணிந்து செல்கிறார். அதை கேலி செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. 

எந்தவித வேலையும் இல்லாதவர்களே இதைப் போன்று விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவார்கள். இது நோய்மை கொண்ட மனம் படைத்தவர்கள் செய்யும் செயல்” என்றார்.

தொடர்ந்து ரஜினி - விஜய் குறித்து பேசிய அவர், “ரஜினி, இன்னும் எத்தனை திரைப்படங்களில் நடிப்பார். அதிகபட்சம் இன்னும் 4 அல்லது 5 படங்களில் அவரால் நடிக்க முடியும். அதன் பிறகு யார் உச்ச நட்சத்திரமாக இருப்பார் என நினைக்கிறீர்கள். விஜய்யால்தான் அது முடியும். இப்போதே அவர்கள் இருவருக்கும் இடையில்தான் போட்டி நடக்கிறது. யார் யாரோ வந்து நடித்து பெயர் வாங்கிக் கொண்டு போகிறார்கள். விஜய் வரட்டுமே. விஜய், என்னுடைய தம்பி. ரஜினிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது” என்று கேள்வியெழுப்பினார். 

.