திமுக, அதிமுக பணம் கொடுக்காமல் களத்தில் நின்றால் பிறகு மக்கள் எங்களை நோக்கித்தான் வந்தாக வேண்டும்- சீமான்
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட 9,018 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தேர்தல் களத்தில் இருந்தது. அந்தக் கட்சி கிட்டத்தட்ட 25,000 வாக்குகள்தான் வாங்கியுள்ளது. இந்த படுதோல்விக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அப்போது ஒரு செய்தியாளர், “வேலூர் தேர்தலில் திமுக - அதிமுக இடையிலான வாக்கு வித்தியாசம்தான் உங்கள் கட்சி வாங்கிய வாக்குகள். தொடர்ந்து மக்கள் நாம் தமிழர் கட்சியை ஏற்றுக் கொண்டனர் என்று சொல்கிறீர்கள். ஆனால், தேர்தலில் அது பிரதிபலிக்கவில்லையே?” என்று கேட்டார். அதற்கு சீமான், “அப்படி பார்க்க முடியாது. இரு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொண்டு, பெரும் பண பலத்துடன் களத்தில் இறங்குகின்றன. பணத்தை வாரி இரைத்து இந்த வெற்றியைப் பெற முயல்கிறது திமுக, அதிமுக கட்சிகள். மக்களுக்கு அதிக காசு கொடுப்பது ஆளுங்கட்சி என்றால், அதற்கு சற்று குறைவாக கொடுப்பது எதிர்க்கட்சி. இப்படிபட்ட சூழலில் நாங்கள் யாரையும் நம்பாமல் நியாயமான முறையில் தேர்தலை சந்திக்கிறோம். திமுக, அதிமுக பணம் கொடுக்காமல் களத்தில் நின்றால் பிறகு மக்கள் எங்களை நோக்கித்தான் வந்தாக வேண்டும். அந்த காலம் கட்டாயம் வரும்.
எங்களைப் பொறுத்தவரையில், சென்ற தேர்தலில் எவ்வளவு வாக்கு வாங்கியிருக்கிறோம். அதே நேரத்தில் இந்தத் தேர்தலில் எவ்வளவு வாக்கு வாங்கியிருக்கிறோம் என்பதைப் பார்ப்போம். இரண்டையும் ஒப்பிட்டால், சென்ற முறையைவிட இந்த முறை அதிக வாக்குகள் வாங்கியிருந்தால், நாங்கள் முன்னேறுகிறோம் என்று அர்த்தம். அதுதான் எங்களுக்கு முக்கியம்” என்று பதில் அளித்தார்.
மாநிலத்தின் பிற பிரதான கட்சிகளான அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.