Seeman on Poll Result: “சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்றே முடிவு செய்து, சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் களப்பணியில் ஈடுபட உள்ளோம்"
Seeman on Poll Result: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டன. மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி, ஒரேயொரு வெற்றியைத்தான் பதிவு செய்தது. அதே நேரத்தில் அமமுக, 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக கூட்டணியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றின.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். தற்போது நடந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளோம். இது ஒரு மாபெரும் வளர்ச்சி. நாங்கள் ஒரு தேர்தலை இப்படித்தான் பார்க்கிறோம். இதில் எத்தனை இடங்களில் வெற்றியடைந்தோம் என்று நாங்கள் கணக்கில் கொள்ளவில்லை.
இரு பெரும் திராவிடக் கட்சிகள் தங்கள் முழு பணப் பலத்தை இரைத்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்துக் களமாடி இவ்வளவு வாக்குகளைப் பெற்றதே பெரிய வெற்றிதான். இன்னொன்று, நாங்கள் கீழ்நிலை உள்ளாட்சி இடங்களில் கணிசமான இடங்களில் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அது பற்றியெல்லாம் ஊடகங்கள் சொல்வதே இல்லை,” என்றார்.
இன்று சென்னை, வேளப்பஞ்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக சொல்லும் சீமான், “சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்றே முடிவு செய்து, சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் களப்பணியில் ஈடுபட உள்ளோம். எங்கள் வேட்பாளர்களில் 50 விழுக்காடு பெண்களாகத்தான் இருப்பார்கள்,” என்று அதரடியாக கூறினார்.