"இதைப் போன்று பேசியதற்காக நான் முன்னரும் சிறை சென்றிருக்கிறேன். எனவே, அதற்காக அஞ்சுபவன் நான் அல்ல”- Seeman
தமிழகத்தில் விக்கிரவாண்டி (Vikravandi), நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகிறார். இப்படி அவர் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் செய்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் (Congress) கட்சியைச் சேர்ந்தவர்கள், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதற்கு எப்படி எதிர்வினையாற்றப்படும் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக சீமான் விக்கிரவாண்டி பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே மாதிரிதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். சரிதான் போடா. ஒரு காலம் வரும். வரலாறு திரும்ப எழுதப்படும். என் இனத்தை இந்திய ராணுவம், அமைதிப் படை என்கிற அணியாயப் படையை அனுப்பி என் இன மக்கள் கொன்று குவித்த, என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்நிலையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து சீமான், “என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். நான் பேசியதைத் திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதைத்தான் 25 ஆண்டுகாலமாக பேசி வருகிறேன். எதையும் நான் மாற்றிச் சொல்லவில்லை. தொடர்ந்து இப்படித்தான் பேசுவேன். காங்கிரஸ் கட்சியினருக்கு வேறு வேலை இல்லை. அதனால், இப்போது என் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதைப் போன்று பேசியதற்காக நான் முன்னரும் சிறை சென்றிருக்கிறேன். எனவே, அதற்காக அஞ்சுபவன் நான் அல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.