தேர்தல் ஆணையம் சார்பிலும் Seeman-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), சில நாட்களுக்கு முன்னர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி (Rajiv Gandhi) குறித்து பேசிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானுக்கு எதிராக வழக்கு, அவருக்கு எதிராக போராட்டம், அவருக்கு எதிராக வார்த்தைப் போர் என்று தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவர், எழுவர் விடுதலை குறித்து எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக சீமான், “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே மாதிரிதான் ராஜிவ் காந்தியைக் கொன்றோம். அதுவும் சரிதான்” என்று பேசினார்.
சீமானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பிலும் சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படி தனக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தன் கருத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று சீமான் உறுதியாக இருக்கிறார். அவரின் இந்த சர்ச்சைப் பேச்சால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர் விடுதலை மேலும் தள்ளிப் போகும் என்றும், வழக்கு கூடுதல் சிக்கலடையும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து சீமான், “ஏழு தமிழர் விடுதலை, நான் பேசிய, சொன்ன கருத்தால் தள்ளிப் போகும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. 28 ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தானே இருக்கிறார்கள். நான் இதற்கு முன்னர் இப்படி பேசியது கிடையாதுதானே. அப்போது ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை?” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.