This Article is From Nov 27, 2019

“அப்பவும் சரி இப்பவும் சரி… வரலாறு மாறும்!”- மீண்டும் ராஜிவ் காந்தி விவகாரத்தில் Seeman பேச்சு

Seeman News - "ராஜிவ் காந்தி குறித்து நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டதாக கொந்தளிக்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன்..."

“அப்பவும் சரி இப்பவும் சரி… வரலாறு மாறும்!”- மீண்டும் ராஜிவ் காந்தி விவகாரத்தில் Seeman பேச்சு

Seeman News - "குறிக்கோளை அடையும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை"

Seeman News - முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி (Rajiv Gandhi) படுகொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதற்கு காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையத்தில் சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்பரையின்போது சீமான் அப்படிப் பேசியிருந்தார். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரனின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சென்னை, போரூரில் கூட்டத்தை ஒருங்கிணைத்தது நாம் தமிழர் கட்சி. 

அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “நான் நாட்டின் வளர்ச்சிக்கும், இந்த இனத்தின் எழுச்சிக்கும் பக்கம் பக்கமாக படித்துவிட்டு வந்து பேசினால், எதையும் கேட்காத சிலர், பச்சை மட்டையால் அடிப்பேன் என்று சொன்னது கொந்தளிக்கிறார்கள். 

ஒடிசாவின் பாடப் புத்தகத்தில் காந்தி எப்படி இறந்தார் என்பதற்கு, எதிர்பாராமல் இறந்து போனார் என்று இருக்கிறது. அதேபோல குஜராத் பாடப் புத்தகத்தில், காந்தி இறந்தது வயிற்று வலியின் காரணாக இருக்கிறது. இப்படி வரலாற்றையே அவர்கள் மாற்றி எழுதுகிறார்கள். அதிகாரமும் ஆட்சியும் கையில் இருப்பதனால் அதிகாரத்தை அவர்கள் மாற்றி எழுதுகிறார்கள். நாங்களும் ஒரு நாள் மாற்றி எழுதுவோம்.

வாஞ்சிநாதன், ஆஷ் துறையை சுட்டுக் கொன்றால் அது தியாகம் என்று வரலாற்றில் சொல்கிறீர்கள். அப்படித்தான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை எங்கள் அக்கா தணு கொன்றது, எங்களுக்குத் தியாகம். 

ராஜிவ் காந்தி குறித்து நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டதாக கொந்தளிக்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன். எங்களின் வரலாறு மாற்றி எழுதப்படும். அதை எழுதிவிட்டுத்தான் நான் போவேன். நாங்கள் வெறுமனே பணத்துக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல. எங்கள் தலைவர் பிரபாகரனின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். குறிக்கோளை அடையும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை,” என்று திட்டவட்டமாக பேசினார். 

.