ஹைலைட்ஸ்
- ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று
- ஜெயா நினைவு தினத்தையொட்டி, அதிமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர்
- 'ஜெயலலிதாவுக்குப் புகழ் வணக்கம்'- சீமான்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அதிமுக-வினர், சென்னை, மெரினா கடற்கரையில் இருக்கும் அவரது நினைவிடத்திற்கு அமைதிப் பேரணி மேற்கொண்டனர். அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பலரும் ஜெயலலிதாவின் நினைவலைகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்தும் அவருடன் உரையாடியது குறித்தும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
“ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராகவும், ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்றும் தீர்மானம் போட்டார். மேலும், சர்வதேச நீதிமன்றம் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் சென்று சந்தித்தேன். சுமார் அரை மணி நேரம் அவருடன் உரையாட முடிந்தது.
அப்போது ஈழத் தமிழர்கள் பற்றியும், இலங்கையில் நிலவும் சூழல் பற்றியும் என்னிடத்தில் விரிவாக பேசினார். எப்படி இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால்தான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் அவர், ஹிலாரி கிளின்டனிடம் ஈழத் தமிழர் பிரச்னை பற்றி 1 மணி நேரத்திற்கு மேல் பேசியதாக அவர் சொன்னார். அதுவெல்லாம் என் நினைவில் இருக்கிறது. அதை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். அவருக்குப் புகழ் வணக்கம்,” என்று உருக்கமாக பேசியுள்ளார் சீமான்.